சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பாண்டாக்களும் கூடும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை ஒரே அறையில் விடப்பட்டன.
இயற்கை சூழலுக்கு வெளியே இந்த பெரும் பாண்டாக்களை இனவிருத்தி செய்வது மிகவும் கடினமான ஒன்று.
பெண் பாண்டாக்கள் ஆண்டொன்றுக்கு 36 மணி நேரமே கருத்தரிக்கக் கூடிய நிலையில் இருப்பதால் டியன் டியான் மற்றும் யாங் குஆங் ஆகிய ஜோடி இனவிருத்திக்கான செயல்பாட்டில் ஈடுபடுவதற்கான அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.
எடின்பரோ மிருகக்காட்சி சாலையில் தற்போது இருக்கும் பாண்டாக்களின் வாழ்க்கையை பார்வையாளர்கள் இணையதள படப்பிடிப்பு கருவிகள் மூலம் காண வழி செய்யப்பட்டிருந்தாலும், அவை இனவிருத்திக்கான நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் காலத்தில் அந்த வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இனப்பெருக்க கவலைகள்
கடந்த செவ்வாய்கிழமை இந்த இரு பாண்டாக்களும் ஐந்து சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்து கட்டிப் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தாலும் அவை இனப்பெருக்கத்தை முன்னெடுக்கும் வகையில் கூடியதாகத் தெரியவில்லை.
ஆண் பாண்டா யாங் குஆங் இனப்பெருக்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆர்வமாக இருந்தாலும், பெண்பாண்டா டியான் டியானின் வால் அதற்கு தடையாக இருப்பதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் ஒரு நீண்ட மூங்கல் தடியைக் கொண்டு அதன் வாலை உயர்த்தவும் முயற்சித்தனர்.
செவ்வாய்கிழமை இரவை தனித்தனியாக கழித்த இந்தப் பாண்டாக்கள் புதன்கிழமை காலை முதல் ஒன்றாக விடப்பட்டன.
"இயற்கை சூழலே மிகவும் ஏற்றது"
மிருகக்காட்சிசாலையில் இப்படியான சூழல் இல்லாததும், ஊட்டச்சத்தும் பிரச்சினைகளாக இருக்கிறது.
மேலும் மிருகக்காட்சி சாலையில் இருபது கிலோ அளவுக்கு மூங்கிலை இந்தப் பாண்டாக்கள் உட்கொண்டாலும் அது அவைகளுக்கு போதிய ஊட்டச்சத்தை அளிப்பதில்லை எனவும் பாண்டா வாழ்க்கையை ஆராயும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இயற்கை சூழலில் அந்த மிருகங்களுக்கு இனப்பெருக்கத்துக்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன எனவும் அவை அதில் எந்த தயக்கத்தையும் காட்டாது எனவும் பாண்டா வல்லுநர் ரொனால்ட் ஸ்வெயிஸ்குட் கூறுகிறார்.
இந்த இரு பாண்டாக்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாதம் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜோடிகளை பார்க்க பெருந்திரளனான ஸ்காட்டிஷ் மக்கள் வந்து செல்கின்றனர்.
